The Glory of God

The Glory of God

சனவரி 26, வருகிற வியாழனன்று, இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்த நாளன்று, மத்திய, மாநில அரசுகள், தங்கள் இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் சக்தியையும், நாட்டின் கலாச்சாரக் கூறுகளையும் விளம்பரப்படுத்த, அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த அணிவகுப்புக்கள், உண்மையான குடியரசு நாள் கொண்டாட்டங்களா, அல்லது, செயற்கையான, போலியான சடங்குகளா என்ற கேள்விகள் எழுகின்றன.

இதற்கு ஒரு மாற்றாக, கடந்த சில நாட்களாக, தமிழகமெங்கும் உண்மையான குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதைக் கண்டு மகிழ்கிறோம். குடிமக்கள் தங்களையே ஆளமுடியும் என்பதையும், இளையோரின் சக்தி எத்தகையது என்பதையும், இந்நாட்களில் உணர்ந்து மகிழ்கிறோம். தமிழக இளையோரின் கட்டுப்பாடு, கலாச்சாரம் ஆகியவை, உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழகத்தின் இளம் பெண்களும், இளைஞர்களும் இணைந்து, மேற்கொண்டுள்ள ஒரு போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்துள்ளது. அரசியல் நாற்றம் அறவே இன்றி நடத்தப்படும் இந்த அறப்போராட்டம், நம்பிக்கையை விதைத்துள்ளது. சுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், இளையோர் மேற்கொண்டுள்ள வழிமுறைகள், நம்மை வியக்கவைக்கின்றன. தனிமனிதத் துதியோ, தூற்றுதலோ அதிகம் இல்லாமல், ஒரு கொள்கைக்கென போராட, வீதிக்கு வந்திருக்கும் இளையோர், நம் மதிப்பில் உயர்ந்து நிற்கின்றனர். ‘ஜல்லிக்கட்டு’ என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, தமிழக இளையோர் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டம், வெற்றிபெற வேண்டும் என்பது நம் வேண்டுதல்.

கொள்கைகளை மையப்படுத்தி, கருத்துக்களை முன்னிறுத்தி, திரண்டுவந்திருக்கும் இளையோரின் சக்தி, ஓர் இயக்கமாக உருவாகி, தமிழகத்தையும், இந்திய நாட்டையும் நல்வழியில் நடத்திச் செல்லவேண்டும் என்பது, நம் தொடர் வேண்டுதலாக இருக்கட்டும். தமிழக மக்களின், இந்திய மக்களின் எதிர்காலம், நேரிய இளையோரின் கரங்களில் உள்ளது என்ற நம்பிக்கை, மக்களிடையே தொடர்ந்து வளரவேண்டும்.

இளையோர் மேற்கொண்ட இந்தப் போராட்டம் எங்கிருந்து உருவானது, யாரால் உருவானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஒரு கட்டுப்பாடுடன் இது தொடர்ந்து செல்வது, ‘மக்கள் இயக்கம்’ என்ற கருத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. எந்த ஒரு தனி மனிதரும், தன் சுய இலாபத்தைத் தேடிக்கொள்ளாமல், சமுதாயத்தின் நன்மைக்கென உழைப்பது, ‘மக்கள் இயக்கத்’தின் இதயத் துடிப்பாக அமைகிறது.

தன்னலம் அறவே இல்லாத இத்தகைய ஓர் இயக்கத்தை உருவாக்க, இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் ‘இறையரசு’ என்ற இயக்கத்தை உருவாக்க மேற்கொண்ட முதல் முயற்சிகளை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு, தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், சீடர்கள் நால்வரை அழைத்ததையும், நற்செய்தியைப் பறைசாற்றியதையும், மக்களை குணமாக்கியதையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை, ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவும், அதே வரிகளை, நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” (எசாயா 9: 2; மத்தேயு 4: 16)

ஆடம்பரங்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும், ஆழமான, அர்த்தமுள்ள பணியாற்றும் மக்கள் இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க, ஒளி, ஓர் அழகிய உருவகம். இயற்கையில் நாம் காணும் மின்னலும், சூரியஒளியும் இந்த வேறுபாட்டை அழகாக விளக்குகின்றன. அரசியல் கட்சிகளை, மின்னலுக்கு ஒப்பிடலாம். பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலிலும், பெருநகரங்களுக்குத் தேவையான மின்சக்தியைத் தரக்கூடிய அளவு, கோடான கோடி Watts மின்சக்தி வெளிப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமித்து வைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள், பயனின்றி, தோன்றி மறைகின்றன. பலவேளைகளில், மின்னல்கள் தாக்குவதால், தீமைகள் விளைவதும் உண்டு. அரசியல் கட்சிகளும், ஆடம்பர நிறுவனங்களும் மின்னலைப் போன்றவை.

இதற்கு மாறானது, சூரியஒளி. இரவு முடிந்து, பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் உதயங்கள் உருவாகும். இயேசுவின் பணி வாழ்வு, பகலவனைப் போல் ஆரம்பமானது. சனவரி 17ம் தேதி துவங்கிய இளையோர் போராட்டம், விடியலைப்போல சிறிது, சிறிதாக ஒளிப்பெற்று, தமிழகமெங்கும் பரவியது. ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால் பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இளையோர் துவங்கியிருக்கும் மக்கள் இயக்க முயற்சி, இதுபோல், மக்களுக்கு பயன்தரும் என்று நம்புவோம், வேண்டுவோம்.

ஒவ்வொரு தலைவனும் மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் கூற்றுகள், செய்யும் முதல் பணி ஆகியவை அந்தத் தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குச் சொல்லும் அடையாளங்கள். “இன்று நாம் ஒரு அரசியல் கட்சியின் வெற்றியைக் கொண்டாடவில்லை, மாறாக, நமது விடுதலையைக் கொண்டாடுகிறோம்” என்று ஒரு நாட்டின் அரசுத் தலைவர் பதவியேற்ற நாளில் தன் உரையை ஆரம்பித்தார். 1961ம் ஆண்டு சனவரி 20ம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜான் கென்னடி அவர்கள், தன் பதவியேற்பு விழாவில் கூறிய முதல் வார்த்தைகள் இவை. அந்த உரையின் இறுதியில், “நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே; மாறாக, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்” என்ற புகழ்பெற்ற வார்த்தைகளை அவர் கூறி முடித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், 2009ம் ஆண்டு, சனவரி 20ம் தேதி, அமெரிக்க அரசுத் தலைவராய் பொறுப்பேற்று, தற்போது பதவி விலகிய பராக் ஒபாமா, “நாம் நிற்கும் இந்த வளாகத்தில் உள்ள எந்த உணவகத்திலும் 60 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை ஓர் இருக்கையில் அமர்ந்து காப்பி குடித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்று, இதோ, நான் உங்கள் முன் இந்நாட்டின் தலைவனாக உறுதிமொழி எடுக்க முடிந்திருக்கிறது” என்று தன் துவக்க உரையில் கூறினார்.

இவ்விதம், ஒவ்வொரு தலைவனும், முதல் முதலாகச் மக்கள் முன் அறிக்கையிட்டுச் சொல்லும் வார்த்தைகளில், அவர்களது எண்ணங்கள், அவர்களது தீர்மானம் ஆகியவை கணிக்கப்படும். சனவரி 20, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அவர்கள், கண்களைப் பறிக்கும் மின்னல் ஒளியென தோன்றி மறைந்துவிடுவாரா, அல்லது, நீடித்த நன்மைகள் தரும் சூரிய ஒளிபோல் செயலாற்றுவாரா என்பதை, பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இயேசு என்ற தலைவன் மக்கள் முன் சொன்ன முதல் வார்த்தைகள் என்று மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளும் சொல்வது இதுதான்: “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.” (மத்தேயு 4: 17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் பணி, தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது.

Sermons List

About Author

Leave a Reply